“காவிரியில் தமிழகத்திற்கான உரிய பங்கை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்!” – மாணிக்கம் தாகூர்

காவிரியில் தமிழகத்திற்கான உரிய பங்கை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும்! என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கமிட்டியின் மாநில் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காவிரியில் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நீரில் சுமார் 20 டி.எம்.சி அளவிற்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் ஏற்கனவே குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தற்போது நடைபெற்று வரும் சம்பா சாகுபடியும் பாசன நீரின்றி பெரும் கேள்விக்குறியாகும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

செப்டம்பர் 25 முதல் 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி வீதம் தமிழகத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று CWRC பரிந்துரைத்து, அதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் (CWMA) ஏற்று அதிகாரப்பூர்வ உத்தரவிட்டுள்ளது. இந்த 4,000 கனஅடி உத்தரவே கூட முந்தைய 6,000 கனஅடி உத்தரவை விட 2,000 கனஅடி குறைவானதுதான். இருப்பினும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் விகிதாச்சார விதிகளின்படியும் CWMA உத்தரவின்படியும் கிடைக்க வேண்டிய நீரையும் திறக்காமல், உச்சநீதிமன்றத்தில் சவால் செய்வோம் எனக் கர்நாடக முதலமைச்சர் கூறி காலந்தாழ்த்துவது ஏற்கவே முடியாத அநீதியாகும்.

எனவே, சட்ட விதிகளையும் ஆணையத்தின் உத்தரவையும் மதித்து, 15 நாட்களுக்கு நாள்தோறும் வினாடிக்கு 4,000 கனஅடி நீர் திறப்பதோடு, நிலுவையில் உள்ள பற்றாக்குறையையும் உடனடியாக ஈடுசெய்து காவிரியில் தமிழகத்திற்கான உரிய பங்கை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிட வேண்டும்!” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.