வள்ளலார் கோயிலில் புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த ஜப்பானியர்கள்!

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஜப்பான் நாட்டவர்கள் 30 பேர் குருபகவானுக்கு மூலமந்திர ஹோமம் வளர்த்து புனிதநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக…

மயிலாடுதுறை வள்ளலார் கோயிலில் ஜப்பான் நாட்டவர்கள் 30 பேர் குருபகவானுக்கு
மூலமந்திர ஹோமம் வளர்த்து புனிதநீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.

சைவ சமயம், தமிழ்மொழி, கலாச்சாரம் மற்றும் சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோ உள்ளிட்ட பல்வேறு
மாகாணங்களைச் சேர்ந்த 30 பேர் ஜப்பான் சிவஆதீனம் பாலகும்ப குருமுனி என்கிற
தகாயுகி ஹோஷி தலைமையில் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

இதையும் படிக்கவும் : உத்தரபிரதேசம்: ஹத்ராஸ் வழக்கில் 3 பேர் விடுதலை!

இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்திபெற்ற பல்வேறு சைவ திருக்கோயில்களில் சிவவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்திபெற்ற வள்ளலார் கோயில் என்று அழைக்கப்படும் ஶ்ரீ வதான்யவரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

ஆலயத்தில் உள்ள குருபகவான் ஶ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு மூலமந்திர ஹோமம் நடத்தி, சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதையொட்டி, கோயில் பிரகாரத்தில், புனித நீர் அடங்கிய கடம் பிரதிஷ்டை செய்து, 136 மூலிகைப் பொருள்களை கொண்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் பூர்ணாகுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து, புனிதநீர் கொண்டு ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக ஜப்பானிய ஆன்மீகக் குழுவினர் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் உள்ள கோயில்கள் மற்றும் முந்தைய ஆதீனகர்த்தர்கள் சித்தியடைந்துள்ள ஆனந்தபரவசர பூங்காவில் உள்ள சமாதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.