லண்டனில் பென்னிகுயிக்கின் சிலை மீது மூடியிருந்த கருப்பு துணி அகற்றப்பட்டுவிட்டதாக அமைச்சர் சாமிநாதன் விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தென் தமிழக மக்களின் தாகம் தீர்த்த பென்னிகுயிக்கிற்கு, லண்டனில் அமைக்கப்பட்ட சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பது தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சாமிநாதன், “தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த உத்தரவு அடிப்படையில், செய்தித்துறையும் பொதுப்பணித்துறையும் இணைந்து லண்டனில் பென்னிகுயிக்கிற்கு சிலை வைத்தது. தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைக்கான செலவு ரூ.10.65 லட்சம். வெளிநாடு என்பதனால், இதனை நிறுவுவதற்கு ரூ.23 லட்சம் ஆனது. எனவே இதன் அடிப்படையில் செலவுகள் அனுமதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள் : பென்னி குயிக் சிலை: சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம்..!
இந்த சிலையை திறப்பதற்காக அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் சில சட்டமன்ற உறுப்பினர்களும் லண்டன் சென்று நிகழ்ச்சியிலே பங்கேற்றனர். சிலை திறப்பதற்கு முந்தைய நாள் இங்கிலாந்து ராணி மறைந்துவிட்டார். அதனால் பிரமாண்டமாக தயார் செய்யப்பட்ட நிகழ்ச்சி, சில நாட்கள் கழித்து எளிமையாகவே நடத்தப்பட்டது.
இந்த சிலையை அங்கே நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு குழு அங்கு அமைக்கப்பட்டது. அந்த குழு விழாவை ஏற்பாடு செய்வதற்காக திட்டமிட்டு, செலவை கூடுதலாக செய்துவிட்டனர். எனவே அது தொடர்பான நிதியை மட்டும் கேட்டு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். எதிர்காலத்தில் முதலமைச்சரோடு கலந்து பேசி நிதி ஆதாரத்திற்கு ஏற்ப அரசு இதனை பரிசீலிக்கும்.
பென்னிகுயிக்கின் சிலை கருப்பு துணியால் கட்டப்பட்டது குறித்து இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது. இதையடுத்து உடனடியாக கருப்பு துணியானது அப்புறப்படுத்தப்பட்டு, திறப்பின்போது இருந்த சூழ்நிலையில் தான் சிலை இருக்கிறது” என்று விளக்கமளித்தார்.








