ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான “தலைவி ” படத்தை உலகளாவிய அளவில் வெளியிட உரிமை பெற்று இருந்த விநியோக நிறுவனம் ரூ.6 கோடியை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான ’தலைவி’ படம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பிற மொழிகளிலும் வெளியானது. இதில் ஜெயலலிதாவாக பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்திருந்தார் . படத்தில் இவரது நடிப்பிற்கு பாராட்டுகள் கிடைத்தன. எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி, கருணாநிதியாக நாசர், ஆர்.எம்.வீரப்பனாக சமுத்திரக்கனி, சசிகலாவாக பூர்ணா உட்பட பலர் நடித்திருந்தனர். ஏ.எல்.விஜய் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இந்துரி படத்தை தயாரித்திருந்தார்.
உலகளாவிய அரசியலில் எல்லோரையும் திரும்பி பார்க்கவைத்த ஒரு மாபெரும் தலைவியை, அவரது சாதனைகளை எடுத்து கூறும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தை உலகளாவிய அளவில் வெளியிட உரிமம் பெற்றிருந்த வினியோக நிறுவனம், படம் எதிர்பார்த்த வசூல் ஈட்டாததால் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.
எனவே பட தயாரிப்பு நிறுவனத்துக்கு முன்பணமாக வழங்கிய ரூ.6 கோடியை திருப்பி தருமாறு வினியோகஸ்தர் தரப்பில் கேட்டு கொள்ளப்பட்டது மட்டுமின்றி இதுகுறித்து தயாரிப்பாளருக்கும் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது . ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதுவரை பணத்தை திருப்பி கொடுக்காததால் வினியோகஸ்தர் தரப்பில் ரூ.6 கோடியை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர இஉள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா








