சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தாலியால் மனைவியின் கழுத்தை இறுக்கி கொலை செய்யதுவிட்டு, 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டியைச் சேர்ந்த ஆனந்தராஜ் – நந்தினி தம்பதிக்கு ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். வேன் ஓட்டுநரான ஆனந்தராஜ், கடந்த 10 நாட்களுக்கு முன், பண்ருட்டியிலிருந்து குடும்பத்துடன் பூந்தமல்லிக்கு வந்து, வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.
கீழ் வீட்டில், நந்தினியின் சகோதரி பவித்ரா குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நீண்ட நேரமாக ஆனந்தராஜ் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த பவித்ராவும் அக்கம் பக்கத்தினரும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார், ஆனந்தராஜின் வீட்டு கதவை உடைத்து திறந்து பார்த்தபோது, நந்தினி, தாலியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 3 குழந்தைகளுடன் தலைமறைவான கணவன் ஆனந்தராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை தாலிக்கயிற்றால் இறுக்கியும், உருட்டுக்கட்டையால் தாக்கியும் ஆனந்தராஜ் கொலை செய்தாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆனந்தராஜ் பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.







