பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் தாக்கிய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துாய்மை பணியாளர்கள் வீட்டு வரி ரசீதை செல்போன் எண்ணுடன் ஆல்லைன் மூலம் பதிவேற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் துாய்மை பணியாளர் பருதிமால் என்பவர் பந்தாரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர். பருதிமால் ஊராட்சி மன்ற வீட்டுவரி ரசீதை ஆன்லைனில் பதிவேற்ற அவருடைய செல்போன் எண்ணை கேட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பஞ்சாயத்து அலுவலத்திற்கு சென்று பணியில் ஈடுபட்டிருந்த ஊராட்சி செயலாளர் துாய்மை பணியாளர்களிடம் அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுப்பதாக கூறி பருதிமால் கூச்சலிட்டார். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் ஜெயாவின் கணவர் சரவணன் அலுவலத்தில் கூச்சலிடக்கூடாது என எச்சரித்துள்ளார். அப்போது சரவணனுக்கும், பருதிமாலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பருதிமால் சரவணனை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார். இதில் காயமடைந்த சரவணன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சரவணன், ஊராட்சி செயலாளர் தனித்தனியே பருதிமால் மீது நாட்றம்பள்ளி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அனகா காளமேகன்






