பக்தியில் உள்ளவர்களே சனாதன தர்மம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்கக் கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றார். அப்போது, செய்தியாளர் சந்தித்த அவர், பக்தியில் உள்ளவர்களே சனாதன தர்மம் என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் நிலையில் இதைப்பற்றி ஆளுநர் பேசியிருக்கக் கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுகவைக் கைப்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என எடப்பாடி கூறியது பற்றிக் கேட்ட போது, காலம்தான் பதில் சொல்லும், தான் ஜோதிடரும் அல்ல, அரசியல் வல்லுநரும் அல்ல, சாதாரண அரசியல்வாதி எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னதாக தமிழ்நாடு ஆளுநரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது எனவும், மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்களின் கோட்பாட்டைத் தூக்கிப்பிடித்து பெருமை பொங்கப் பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘அதிர்ச்சி! தமிழ்நாட்டில் மேலும் ஒரு விசாரணை கைதி மரணம்’
மேலும், இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல எனவும், ஆளுநர் ரவி தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் எனக் கூறியுள்ளார். “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியிலிருந்து கொண்டு பிறவி பேதத்தைக் கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாகப் பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார் எனத் தெரிவித்துள்ள அவர், உடனடியாக குடியரசுத் தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.









