”7 பேர் விடுதலை: ஆளுநரிடம் முறையான பதில் இல்லை”- மு.க.ஸ்டாலின்!

7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்காமல், ஆளுநர் தாமதிப்பது உள்ளிட்ட காரணங்களால், ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர்…

7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் முடிவெடுக்காமல், ஆளுநர் தாமதிப்பது உள்ளிட்ட காரணங்களால், ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில், தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் பேசத் தொடங்கும் முன்பு, திமுக உறுப்பினர்கள் எழுந்து பேச முயன்றனர். இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தாம் பேசுவதில் தவறு ஏதும் இருக்கிறதா, என்று அவர்களிடம் கேட்டார். அப்போது திமுகவினர் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த அரசின் இறுதி கூட்டத்தொடர் என்பதால், தயவு செய்து கூச்சல் போட வேண்டாம், என்று கூறிய ஆளுநர், தமது உரையைத் தொடங்கினார். இதன் பின்னர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். கலைவாணர் அரங்கத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், பேரவையில் தாம் பேச முயன்றபோது , ஆளுநர் அதற்கு அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது, ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்த நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்றும் அவர் குறிப்பிட்டார். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக, ஆளுநரிடம் இருந்து முறையான பதில் இல்லை, என்றும் ஸ்டாலின் கூறினார். மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கூற சட்டமன்றத்தில் வாய்ப்பு இல்லை என்பதால், கூட்டத்தொடரை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும், ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply