“வேளாண் பட்ஜெட் நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது” – மாணிக்கம் தாகூர்!

தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் நவீன வேளாண்மைக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “தமிழ்நாடு 2026–27 வேளாண் வரவு-செலவுத் திட்டம், பாரம்பரிய வேளாண்மையை தொழில்நுட்பத்துடன் இணைத்து எதிர்காலத்தை நோக்கி நகர்த்தும் ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது.

முக்கியமாக, தஞ்சையில் இயற்கை வேளாண்மையின் முன்னோடி நம்மாழ்வார் அவர்களின் பெயரில் உயிர்ப் பண்ணை வேளாண் கல்லூரி அமைக்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்கது.

செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான “உழவர் AI” சேவை மூலம் வானிலை, மண் வளம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, சந்தை தகவல் உள்ளிட்ட ஆலோசனைகளை விவசாயிகளின் கைகளுக்கே கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால வேளாண்மைக்கான முக்கிய முன்னேற்றம்.

‘வெற்றி வான்மகள்’ திட்டத்தின் மூலம் பெண்களுக்கு ட்ரோன் பயிற்சி அளித்து, 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்கும் அறிவிப்பு, பெண்களின் பங்களிப்பை நவீன வேளாண்மையில் உயர்த்தும் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது.

மகசூல் திறனை அதிகரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் ‘மக்கள்தொண்டர் அஞ்சலை அம்மாள்’ விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பதும் பாராட்டுக்குரியது.

தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம், இயற்கை மற்றும் உயிர்ம வேளாண்மைக்கு ஊக்கம், பருத்தி மறுமலர்ச்சி இயக்கம், வேளாண் காடுகள் திட்டம், கார்பன் வர்த்தகத்தின் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டும் வாய்ப்பு போன்ற பல புதிய முயற்சிகள் இந்த வரவு-செலவுத் திட்டத்தின் பலமாக அமைந்துள்ளன.

வனப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் விவசாயிகளின் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்த காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க தனித்திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது மிகவும் அவசியமான மற்றும் வரவேற்கத்தக்க நடவடிக்கை. சுற்றுச்சூழலுக்கு உகந்த காட்டுப்பன்றி விரட்டி, சூரிய சக்தி மின்வேலி உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவாகவும் முழுமையாகவும் செயல்படுத்தப்பட வேண்டும்.

தொழில்நுட்பம், நிலைத்தன்மை, பெண்களின் பங்கேற்பு மற்றும் விவசாயிகளின் வருமான உயர்வை இலக்காகக் கொண்ட இந்த வேளாண் வரவு-செலவுத் திட்டம் ஒரு நல்ல தொடக்கம். அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விரைந்து, முழுமையாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் சென்றடைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.