16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட மாலதியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டி வலசு பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்றது தொடர்பாக சிறுமியின் தாயார் சுமையா, தாயாரின் இரண்டாவது கணவர் சையத் அலி, இடைதரகர் மாலதி மற்றும் ஆதார் கார்டு திருத்தம் செய்து கொடுத்த ஜான் உள்ளிட்ட 4 பேரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் கருமுட்டை பெற்ற விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், இடைத்தரகராக செயல்பட்ட மாலதியின் வங்கிக்கணக்கில் பல்வேறு தேதிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஈரோடு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இடைத்தரகராக செயல்பட்ட மாலதியை ஒருநாள் மட்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
– இரா.நம்பிராஜன்








