பிரதமர் சொன்னதால் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒற்றைத் தலைமையாக அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் வர வேண்டும் என அவரது ஆதரவாளர்களும் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றன. இதுபற்றி எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக ஆலோசித்து வந்தனர்.
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “பொது செயலாளர் பொறுப்பு ஜெயலலிதாவுக்கு மட்டுமே பொருத்தமானது. எனவே நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்புகளை உருவாக்கினோம். இரட்டை தலைமை என்பது பதவிகளில் என்று மட்டும் சொன்னார்கள். இரண்டு நாட்கள் கழித்து இரண்டு பேரும் கையெழுத்திட வேண்டும் என்று சொன்னார்கள். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக ஒப்புக்கொண்டேன்.
6 ஆண்டுகளாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராகவும் ஆட்சியில் முதலமைச்சர், துணை முதலமைச்சராகவும் இருந்தோம். துணை முதலமைச்சருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த போது துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்று கொள்ள சொன்னார். அதன் அடிப்படையில் கடந்த ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பை ஏற்றேன்” என்று கூறினார்.







