போராட்டத்தின்போது காவலரின் சட்டையைப் பிடித்த காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேஷ்னல் ஹெரால்டு நிதிமுறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இன்று போராட்டம் நடைபெற்றது.
இதில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரேணுகா சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதி இன்றி நடத்தப்பட்டதால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர். அப்போது, ரேணுகா சவுத்ரி மிகுந்த கோபத்துடன் அங்கிருந்த காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த பெண் போலீசார் ரேணுகா சவுத்ரியை கைது செய்து அருகில் இருந்த வேனில் ஏற்றினர். இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து, அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றச்சாட்டின் கீழ் ரேணுகா சவுத்ரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரேணுகா சவுத்ரி, தனக்கு காலில் பிரச்னை இருப்பதாகவும், போாரட்டத்தின்போது போலீசார் தன்னை தள்ளியதால் தான் தடுமாறி கீழே விழ இருந்ததாகவும் இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே அந்த காவலரின் சட்டையை பிடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மற்றபடி அந்த காவலர் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் அவருக்கும் தனக்கும் வேறு எந்த பிரச்னையும் கிடையாது என்றும் தெரிவித்த ரேணுகா சவுத்ரி, தன் மீதான வழக்கை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என கூறினார்.









