நீதிமன்றம் அருகே ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல்! தப்பியோட முயன்றவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை!

நீதிமன்றம் அருகே ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல், அவர் தப்பியோட முயன்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற நிகழ்வு சென்னை அருகே நடந்தேரியுள்ளது. சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள விஜிபி…

நீதிமன்றம் அருகே ரவுடியை ஓட ஓட வெட்டிய கும்பல், அவர் தப்பியோட முயன்ற போது நாட்டு வெடிகுண்டு வீசி கொன்ற நிகழ்வு சென்னை அருகே நடந்தேரியுள்ளது.

சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள விஜிபி நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். ரவுடியான இவர் மீது பீர்க்கங்கரணை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஜூலை 6 ஆம் தேதி லோகேஷ் தன் மீதுள்ள குற்ற வழக்கின் விசாரணைக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தார். நீதிமன்றம் எதிரேயுள்ள ஜூஸ் கடை அருகில் லோகேஷ் நடந்துவந்தபோது, அங்கு மறைந்திருந்த கும்பல் லோகேஷை சுற்றுவளைத்து அரிவாளால் வெட்ட முயன்றது.

சுதாகரித்துக்கொண்ட லோகேஷ் அவர்களிடம் சிக்காமல் அங்கிருந்து தப்பியோட, விடாமல் அவரை துரத்திய கும்பல் லோகேஷ் மீது நாட்டு வெடிகுண்டை வீசியது. இதில் நிலைகுலைந்த அவர் கீழே விழுந்ததும் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். பொதுமக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

சம்பவ இடம் வந்த செங்கல்பட்டு நகர போலீசார் கொலை செய்யப்பட்ட லோகேஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஊரப்பாக்கத்தை அடுத்த இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பட்டாசு பாலு என்பவருக்கும், லோகேஷின் சகோதரரான பாச்சி என்கிற பிரகாஷுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. அதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், பட்டாசு பாலுவின் நண்பரான பாலாஜி என்கிற பாலகிருஷ்ணனும் பட்டாசு பாலுவிற்கு ஆதரவாக பாஸ்கரிடம் பிரச்னையில் ஈடுபட்டு வந்தார்.

2015 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும்போது ஏற்பட்ட பிரச்னையில் பாலாஜி என்கிற பாலகிருஷ்ணனை, பாஸ்கர், அவரது சகோதரர் லோகேஷ், நண்பர்கள் சீனு, குமார் மற்றும் மோகன் ஆகியோர் சேர்ந்து வெட்டி படுகொலை செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி தரப்பைச் சேர்ந்த விவேக் மற்றும் கூட்டாளிகள், 2017 ஆம் ஆண்டு பாச்சி என்கிற பாஸ்கர் மற்றும் சீனுவை பழிக்குப்பழியாக கொலை செய்தனர். அதன் தொடர்ச்சியாக தற்போது லோகேஷும் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், பட்டாசு பாலு தரப்பைச் சேர்ந்த விவேக் மற்றும் கூட்டாளிகளே பழிவாங்கும் நோக்கில் இந்த கொலையையும் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் பட்டாசு பாலு தரப்பினரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மற்றொருபுறம் கொலை நடந்த சம்பவ இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி கொலையாளிகளை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். குற்றப் பின்னணியுடைய ரவுடி நீதிமன்றம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.