கர்ப்ப கால சந்தேகங்களை ஒளிவு மறைவின்றி விரிவாக விளக்குவதற்கான முயற்சியாக இந்த தொடர் கட்டுரை எழுதப்படுகிறது. அதன்படி, முதல் கட்டுரையாக “பெண்களின் கர்ப்பம் கண்டறியும் முறை” என்ற கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது அதன் தொடர்ச்சியாக “கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்கள்” என்ற இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
ஒரு பெண் கருவுற்ற நாள் முதல் மிகப்பெரிய மகிழ்ச்சியையும், வலியையும் உணர்கிறார். அதிலும் முதல் மூன்று மாத காலங்களில் மிகுந்த பாதுகாப்பாக இருக்க அப்பெண் அறிவுறுத்தப்படுகிறார். இந்த காலத்தில் உணவு, உடை, நடை என எல்லாவற்றிலும் கருவுற்ற பெண் பல மாற்றங்களை சந்திக்க வேண்டி வருகிறது. சில நேரங்களில் இந்த நடைமுறைகள் அவர்களுக்கு மிகுந்த சிரமத்தை தருவதாக பரவலாக சொல்லப்படுகிறது.
அடுத்த பத்து மாதத்தில், வீட்டிற்கு ஒரு ‘புது வரவு’ என்ற ஆவலுடன் கருவுற்ற பெண் காத்திருக்கும் போது, ஏதேனும் தவறு நடந்து விடுமோ என்ற பயமும், இந்த முதல் மூன்று மாதத்தில் அந்த பெண்ணுக்கு ஏற்படுவதாகவும், அதிலும் முதல்முறை கர்ப்பம் ஆகும் பெண்களுக்கு இந்த பயம் அதிக அளவில் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற பயத்தில் இருந்து மீள எளிய வலி பிடித்தவற்றை அந்த தருணங்களில் மருத்தவர் ஆலோசனைப்படி செய்தல் வேண்டும். என்ன ஆகுமோ என்ற அச்சத்தை முதலில் தவிர்க்க வேண்டும், அதேநேரத்தில் கர்ப்பகாலத்தின் முதல் மூன்று மாதங்களில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கருவுற்ற நாள் முதல் பெண்கள் சந்திக்கும் முதல் பிரச்சனை உணவு ஒவ்வாமை. இந்த ஒவ்வாமையை பெண்கள் எதிர்கொள்வதால் பெரும்பாலும் அவர்கள் உணவை தவிர்க்க வேண்டிய சூழ்நிலைக்கு செல்கின்றனர். இதனால், பலவீனமாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேநேரம், கருச்சிதைவுக்கு பல காரணம் இருந்தாலும், இந்த உணவு ஒவ்வாமையால் ஏற்படும் பலவீனம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது.
கருவின் வளர்ச்சி இந்த முதல் மூன்று மாதத்தில் அதிகரிக்கும் என்பதால், கருவின் வளர்ச்சியை மேம்படுத்த உதவி புரியும் கால்சியம் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள மருத்துவர்களால், அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் கால்சியம் நிறைந்த மருந்துகளையும் எடுக்க சொல்கின்றனர். இந்த மாத்திரைகள் குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நவீன நாகரீக வளர்ச்சியில் மருந்து மாத்திரைகள் கட்டாயம் என்ற சூழ்நிலையில், கர்ப்ப காலத்தில் மருத்துவரின் பரிந்துரையின்றி எந்தவித மருந்து மாத்திரைகளையும் எடுக்க கூடாது என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில், கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், அவை சில நேரங்களில் கருச்சிதைவுக்கு வழிவகுப்பதாக சொல்லப்படுகிறது. இது ஒவ்வொரு கருவுற்ற பெண்ணுக்கும் மாறுபடும், கருவுற்ற பெண்ணின் உடல் தன்மையின் அடிப்படையில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் மிகவும் எளிய பயிற்சிகளை மட்டும் செய்வது நல்லது.
கருவுற்ற பெண்ணுக்கு புகைபிடித்தல், மது அருந்தும் பழக்கமிருந்தால் கைவிடுவது நல்லது . மது, புகை பழக்கம் பிறப்பு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும், முன்கூட்டியே குழந்தை பிறக்க செய்யும், குறைவான எடையுடன் குழந்தை வளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிகின்றனர். கருவுற்ற நாள் முதல், அரைவேக்காட்டில் சமைத்த சைவ / அசைவ உணவு பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கைவிடுகின்றன. ஏனெனில், இவை கருச்சிதைவு மற்றும் பிறப்பு குறைபாடுகளை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுவதால் இதனை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றனர்.
டீ, காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை முழுமையாக தவிர்க்க வேண்டும் என பெரும்பாலான மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், 1/2 லிட்டர் அளவு பால் தினமும் உட்கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள் . கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், தினசரி எடுக்கும் பால் உட்பட அனைத்து உணவிலும் சர்க்கரை மற்றும் உப்பின் அளவை குறைத்துக் கொள்ள பரிந்துரைக்கின்றனர். அதேபோல் இந்த காலத்தில் உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால், ஸ்டீம் பாத் போன்றவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும், உடலுக்கு வெப்பம் கொடுக்கும் அசைவ உணவுகளை முழுமையாக தவிர்த்து மீன் போன்ற உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அத்துடன், இந்த முதல் மூன்று மாத காலத்தில் கணவன் – மனைவி இருவரும் உடலுறவில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், இந்த காலத்தில் தான் கரு வளர்ச்சி சீராக நடைபெறும் என்பதால், கரு வளர்ச்சியின் போது உடலுறவில் ஈடுபடுவது கரு வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் என தெரிவிக்கும் அவர்கள், கருச்சிதைவு நடக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கின்றனர். இதனால், முழுமையாக உடலுறவை தவிர்த்து கணவன் மனைவி இருவரும் அன்பை வெளிப்படுத்தி மகிழ்ச்சியுடன் பரஸ்பர புரிதல் இருத்தல் அவசியம். அதேசமயம், மூன்று மாதத்திற்கு பிறகான உடலுறவை மருத்துவரின் அறிவுறுத்தல் படி மேற்கொள்வது நல்லது. இது ஒவ்வொரு கருவுற்ற பெண்ணுக்கும் உடல் தன்மை மாறுபடும்.
அதேபோல், இந்த கால கட்டத்தில் அன்னாசி பழம், பப்பாளி பழம் போன்றவற்றை சாப்பிட கூடாது என சொல்லப்படுவதுண்டு. ஆனால், ஆய்வு ரீதியாக அன்னாசி பழம், பப்பாளி போன்ற பழங்களால் கருவுற்ற பெண்ணுக்கு தீங்கு உள்ளதா என்பது குறித்து இதுவரை சொல்லப்படவில்லை. அவரவர் உடல் தகுதிக்கேற்ப மருத்துவரின் அறிவுரைப்படி பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. தினசரி, பாதாம், முட்டை, பால், பேரிச்சை, மாதுளை போன்ற உணவுகளை எடுப்பது கருவுற்ற பெண்ணுக்கும் கருவில் உள்ள சிசுவுக்கும் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







