“முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது” – #TVK தலைவர் விஜய் அறிக்கை!

தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த பிப்ரவரியில்…

தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த விஜய், சமீபத்தில் தனது கட்சிக் கொடியையும், பாடலையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைபாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மாநாடு நடத்த அனுமதி அளிப்பதற்கு முன்னதாக, மாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகளை காவல்துறை தவெக கட்சியினர் முன்வைத்தனர். இந்த கேள்விகளுக்கு நேற்று முன்தினம் (செப். 6) விஜய் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனிடையே, காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும், அதன்படி இந்த மாநாடு ஏற்கனவே அறிவித்த செப். 23-ம் தேதியில் மாற்றம் இன்றி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது. தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது.

இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.