குடிப்பழக்கத்துக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! போஸ்டர் அடித்து அசத்தல் விழிப்புணர்வு!!

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது.…

குடிப்பழக்கத்தை கைவிட்டு ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, போஸ்டர் அடித்து ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடியவரின் செயல், கலகலப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூரிலுள்ள பக்தவத்சலம் நகரில் வசிப்பவர் மனோகரன். இவருக்கு தற்போது 53 வயதாகிறது. கடந்த 32 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர், அதை, விடவேண்டும் என உறுதியுடன் முடிவெடுத்து, கடந்த ஒரு வருடமாக மதுவைத் தொடுவதில்லை. 2022-ம் ஆண்டு பிப்ரவரி 26-ம் தேதி, மதுவை விட்டொழித்த இவர், ஒரு வருடம் நிறைவடைந்ததை நினைவில் வைத்துக் கொண்டு, போஸ்டர் அடித்து
ஊரெல்லாம் ஒட்டி கொண்டாடி வருகிறார்.

அந்த போஸ்டர் அடிக்க ஒரு உபயதாரரை வேறு தேடிக் கண்டுபிடித்துள்ளார் மனோகரன். இதுகுறித்து மனோகரன் கூறுகையில் , குடிப்பழக்கத்தால் தனது மரியாதையை, ஊரில் மட்டுமின்றி சொந்த வீட்டிலும் இழந்திருந்ததாகக் கூறினார். ஒரு நாளைக்கு குறைந்தது 300 முதல் 400 ரூபாய் வரை குடிப்பதற்கு செலவிட்டதால், வீட்டு மனை ஒன்றையே விற்க நேரிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்த மனோகரன், தற்போது அந்தப் பழக்கத்தை விட்டு விட்டதால், வீட்டிலும் ஊரிலும் மரியாதை கூடியுள்ளது எனவும் உடல் நலமும் சீராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குடியின் சீரழிவுகளை மற்றவருக்கு உணர்த்தவே, சிலர் கிண்டல் செய்தாலும் பரவாயில்லை என போஸ்டர் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகக் கூறினார்‌. ‘குடிப்பவர்கள் திருந்தினால் மதுக்கடைகளை அரசாங்கம் தானாக மூடும்’ என்ற அவரது வார்த்தைகள், பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

-ஜேம்ஸ் லிசா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.