சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அருகே பெரிய மரம் சாய்ந்து விழுந்ததில் பெண் காவலர் உயிரிழந்தார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் கனமழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதி அருகே பெரிய மரம் ஒன்று திடீரென சாய்ந்து விழுந்துள்ளது. இதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்துள்ளது. கனமழையால் மரம் சாய்ந்திருக்க கூடும் என கூறப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.







