பர்தா அணியாமல் ஜீன்ஸ் அணிந்துவந்த பெண்ணின் தந்தையை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 230 கி.மீ தூரத்தில் இருக்கிறது பிஸ்வநாத் சரியலி (Biswanath Chariali) நகரம். இந்தப் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர், இயர்போன் வாங்குவதற்காக அங்குள்ள செல்போன் கடை ஒன்றுக்கு சென்றார். கடைக்காரரான நூருல் அமீன், ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக அந்தப் பெண்ணை திட்டினாராம். பர்தா அணியாமல் ஏன் இப்படி வந்தாய் என்று கேட்டு இயர்போன் தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து அந்த இளம்பெண் தனது தந்தையிடம் கூறினார். ஆவேசமடைந்த அவர், கடைக்கு வந்து, ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நூருல் அமின் மற்றும் அவர் உறவினர்கள் சஃபிக்குல் இஸ்லாம், ரஃபிக்குல் இஸ்லாம் ஆகியோர் அவரை தாக்கியுள்ளனர்.
காயமடைந்த அவர் போலீசில் புகார் செய்தார். விசாரணைக்குப் பின், நூருல் அமின், சஃபிக்குல் இஸ்லாம், ரஃபிக்குல் இஸ்லாம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய, அந்த இளம் பெண்ணின் தந்தை, நாங்கள் அசாமில்தான் பிறந்து வளர்ந்தோம். இந்த மாநில கலாச்சாரம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். என் மகள் கல்லூரி படிக்கிறார். அவளுக்கு நம் கலாச்சாரம் தெரியும். ஆனால், ஜீன்ஸ் அணிந்ததற்காக கடையில் இருந்து அவளை வெளியேற்றியுள் ளனர். இவர்கள் பெண்களை பர்தா, ஜிகாப் அணிய கட்டாயப்படுத்தி அசாமில் தலிபான்களை போல செயல்பட முயல்கின்றனர் என்றார்.








