இந்திய கிரிக்கெட் அணிக்கு இது போதாத காலம். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணி, அங்கிருந்து அப்படியே துபாய் வந்திறங்கியது, ஐபிஎல் தொடருக்காக! கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடிய இந்திய அணி, அடுத்து டி-20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்றிருக்கிறது.
இந்த தொடர், துபாய், சார்ஜாவில் நடப்பதால், ஐபிஎல் தொடரில் பங்கேற்றது இந்திய அணிக்கு பெரிய பலமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தலைகீழாக மாறியிருக்கிறது நிலவரம். முதல் போட்டியிலேயே விக்கெட் இழப்பின்றி வெற்றிகொண்டு இந்திய அணியை மனரீதியாக தாக்கியது பாகிஸ்தான் அணி. அதில் இருந்து மீண்டு அடுத்த போட்டியில் அசத்துவார்கள் என்று பார்த்தால், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அப்படியே சரண்டர்!
ஏன், என்னாச்சு ? -ரசிகர்களில் இருந்து முன்னாள் வீரர்கள் வரை ஆச்சரியத்தில் மூழ்க, உண்மையை ஒப்புக்கொண்டார் ஆக்ரோஷ கோலி. ’நாங்க தைரியமா ஆடாததுதான் தோல்விக்கு காரணம்’ என்றார், வெளிப்படையாக. இது கடும் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது. முன்னாள் ஜாம்பவான்கள் கோலி சொன்னதை சாடியிருக்கிறார்கள். சிலர் ஏமாற்றம் அளித்ததாகக் கூறியுள்ளனர்.
இதற்கிடையே பேசிய பந்துவீச்சாளர் பும்ரா, ’எங்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் ஓய்வு தேவைப்படுது. குடும்பத்தை பிரிஞ்சு, 6 மாசமா தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கோம். பயோ-பபுள் சூழல்ல இருக்கிறதால எங்களுக்கு மீண்டுவர ஓய்வு தேவை’ என்று கூறியிருக்கிறார். இதுவும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
இந்நிலையில், இந்திய அணிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்திருக்கிறார், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான கெவின் பீட்டர்சன்.
இதுபற்றி ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ள அவர், ‘எந்த வீரரும் தோற்கவேண்டும் என்று நினைப்பதில்லை. உங்கள் நாட்டுக்காக விளையாடுவது என்பது பெருமையான விஷயம். விளையாட்டு வீரர்கள் ஒன்றும் ரோபோக்கள் அல்ல. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். அனைத்து நேரங்களிலும் அவர்களுக்கு ஆதரவு தேவை என்பதை உணருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.









