சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் வேலையை தொடர மத்திய தொழில்துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி உதவ வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், சிவகாசி பட்டாசுத் தொழில் நூறு ஆண்டுகள் பழமை மிக்க தொழிலாக இருக்கிறது. இதன் மூலம் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்த தொழில் பல தடைகளை சந்தித்து வருகிறது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த தொழிலை பொறுத்தமட்டில் சாதாரண பட்டாசை தயாரிப்பதில் இருக்கும் கஷ்டங்களும், அரசு அதிகாரிகள் கொடுக்கும் தொல்லைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதானி, அம்பானியால் இந்த தொழில் நடத்தப்படவில்லை என்றாலும் சாதாரண தொழிலதிபர்களால் நடத்தப்படும் தொழிலாக இருக்கிறது. சிவகாசி பட்டாசு தொழிலில் தற்போது வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 10 லட்சம் பேர் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது வேலைகளை காப்பாற்ற மத்திய தொழில்துறை அமைச்சர் இதில் தலையிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் வேலையை தொடர உதவ வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.







