வீட்டு வசதித்துறையில் நவீன தொழில்நுட்பங்களை, மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருவதாக, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மாதிரி வீட்டுவசதி திட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் புதிய குடியிருப்புகள் அமைக்கப்படுகின்றன. தமிழகம், ஜார்க்கண்ட், குஜராத், உத்தரபிரதேசம், திரிபுரா, மத்திய பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலக அளவில் உள்ள நவீன கட்டுமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இயற்கை சீற்றங்களால் பாதிக்காத அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் அமைய உள்ளன. சென்னை பெரும்பாக்கத்தில், 116 புள்ளி 27 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 152 அடுக்குமாடி குடியிருப்புகள், இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துகொண்டு, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 6 மாநில முதலமைச்சர்களும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய, பிரதமர் மோடி, இந்த 6 திட்டங்களும் நாட்டின் கட்டுமானத்துறையை, புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று குறிப்பிட்டார். வீட்டு வசதித்துறை போதுமான திட்டமிடல்கள் இல்லாத நிலை இருந்ததை, பாஜக அரசு மாற்றி அத்துறையில் புதிய அணுகுமுறையை உண்டாக்கி முன்னேற்றம் அடையச் செய்துள்ளதாக, பிரதமர் மோடி கூறினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும், வீட்டு வசதி திட்டங்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.