புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்கள்
மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் புகழ்பெற்ற ஸ்தலம் மணக்குளவிநாயகர் ஆலயமாகும், இந்த
ஆலயத்தில் லட்சுமி என்ற பெண் யானை உள்ளது, இது கோயிலுக்கு வரும்
பக்தர்களுக்கும், வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளையும்
வெகுவாக கவர்ந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தந்தத்துடன் கூடிய பெண் யானையாக காட்சிதந்த லட்சுமி காலில் கொலுசு அணிந்தும்
முக்கிய நாட்களில் நெற்றிப்பட்டம் அணிந்தும் காட்சி தந்து இந்த கோயிலுக்கு
வரும் பக்தர்களுக்கு ஆசிர்வாதம் அளித்து அனைவரின் அன்பையும் பெற்றுள்ளது.
இந்த லட்சுமி யானை கடந்த 1997-ம் ஆண்டு 6 வயதாக இருக்கும்போது மனக்குள
விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் லட்சுமி வழக்கம்போல்
காமாட்சி அம்மன் கோயில் வீதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது திடீரென
மயங்கி விழுந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தது.
இதனை பார்த்த அவ்வழியே நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள்
அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஆழ்ந்த
சோகத்தில் மூழ்கினர். மேலும் அவர்கள் லட்சுமி யானைக்கு மாலை
அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
லட்சுமி யானை இருதய நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும், இன்று மாலை யானைக்காக வாங்கப்பட்ட இடத்தில் இறுதி சடங்கு நடைபெறும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் செல்ல பிள்ளை என அழைக்கப்படும் லட்சுமி யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.