முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

30 ஆண்டுகளாகியும் மறையாத வானவராயர் புகழ்! ரசிகையின் கடிதத்தை பகிர்ந்த ஏவிஎம் நிறுவனம்!


பி.ஜேம்ஸ் லிசா

கட்டுரையாளர்

30 ஆண்டுகளை கடந்திருக்கும் ‘எஜமான்’ திரைப்படத்தை கொண்டாடும் விதத்தில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் எஜமான் படம் குறித்த ரசிகை ஒருவரின் கடிதத்தை இன்று பொக்கிஷ பதிவாக வெளியிட்டுள்ளது.

இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் எஜமான். இதில் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், நம்பியார், மனோரமா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அதுவரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த மீனா, ராஜ்கிரணுக்கு ஜோடியாக என் ராசாவின் மனசிலே திரைப்படத்தில் நடித்து பிரபலமாகி இருந்தார். பிறகு தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த நேரத்தில், ரஜினியுடன் அவர் சேர்ந்து நடிக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்தபோது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. காரணம் அவர் ரஜினிக்கு மகளாக ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதால் தான். அதே போல் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஏ.வி.எம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற செய்தியும் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுக்க… பெரிய இடைவேளைக்கு பிறகு ஏ.வி.எம் தயாரிக்கும் இந்த படத்தில் இசைஞானி இளையராஜாவும் கோவங்களை மறந்து இணைகிறார் என்ற தகவல் அன்று பரபரப்பையும், மிகுந்த எதிர்பார்ப்பையும் படத்தின் மீது ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சொல்லப்போனால்  “அன்புள்ள ரஜினிகாந்த்” திரைப்படத்தில் “ரஜினி அங்கிள்” என்று அழைத்து குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் மீனா.  எஜமான் திரைப்படத்தில் அவரை ஜோடியாக போட்டபோது, குழந்தை போல நடித்தவர், அவருக்கே ஜோடியா ? என்ற விரசமான கேள்விகள் எழுந்தன.  அதை தவிடு பொடியாக்கும் விதமாக அமைந்தது எஜமான் திரைப்படத்தில் இடம்பெற்ற ரஜினி, மீனாவின் ஜோடி பொருத்தம். வாழ்ந்தால் இப்படி ஒரு கணவன், மனைவியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது வானவராயர், வைதீச்வரி கதாபாத்திரங்கள். இத்தனைக்கும் படத்தில் அதிக நெருக்கமோ, ஊடலோ கொஞ்சம் கூட இல்லாமல் நகைச்சுவை கலந்த காதல் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்கள் ரஜினி, மீனா ஜோடி. மேலும் தங்களுக்கு குழந்தை இல்லை என வருந்தும் போது அவர்கள் கண்களில் வடிந்த கண்ணீர் துளிகள் திரையரங்குகளையும் சேர்த்தே அன்று நனைத்தன. இத்தகைய உணர்வை இப்படம் கடத்தியதால் அதையே தங்களது படத்தின் பிரமோஷன் துருப்பு சீட்டாக பயன்படுத்தியது ஏ.வி.எம் நிறுவனம். எஜமான் வெளியான நேரத்தில் திரைப்படம் குறித்து பார்வையாளர்கள் கடிதங்கள் மூலம் உங்கள் கருத்துகளை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறு அன்று ஏ.வி.எம் சரவணன் ரசிகர்களிடம் கேட்டிருந்தார்.

அதன்படி எஜமான் திரைப்படத்திற்கு அதிகளவு கடிதங்கள் வந்த வண்ணம் இருந்த நேரத்தில் தான், ஒரு ரசிகை எஜமான் திரைப்படத்தை பார்த்துவிட்டு அனுப்பிருந்த கடிதம் ஏ.வி.எம் நிறுவனத்தை மிகவும் கவர்ந்தது. அதில் ” தனது வருங்கால கணவரை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்குமெனில் நான் வானவராயர் போல் இருப்பவரை தேர்ந்தெடுத்து உடனடியாக திருமணம் செய்து கொள்வேன்” என்று அந்த பெண் எழுதியிருந்தார். ஏவிஎம் விளம்பர குழு இதனை படத்தின் விளம்பரத்திற்கு பயன்படுத்தலாம் என திட்டமிட, உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்த முடியாது என்ற சிக்கல் வந்தது.

ஆகையால் உடனே கடிதம் எழுதிய ரசிகையை தேடி கண்டுபிடித்து அவரிடம் விளம்பர குழு இதுகுறித்து கேட்டுள்ளது. ஆரம்பத்தில் தனது தந்தையை நினைத்து பயந்தார் அவர் . ஆனால், ஆச்சர்யம் என்னவென்றால் அவரது அப்பா கடிதத்திற்கான ஒப்புதல் மட்டுமல்லாமல் மகளின் புகைப்படத்தையும் சேர்த்தே கொடுத்தனுப்பியுள்ளார். இந்த கடிதம் விளம்பரத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு பெருவாரியான வரவேற்பை மக்களிடத்தில் பெற்றதோடு, பாக்ஸ் ஆஃபிஸில் பிளாக்பஸ்டர் வெற்றியாக மாறி 25 திரையரங்குகளில் 175 நாட்கள், 50 திரையரங்குகளில் 100 நாட்கள், 75 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓடி சரித்திர சாதனை படைத்தது ‘எஜமான்’ திரைப்படம் .

இதுமட்டுமல்லாமல் “நான் வைதீச்வரி போன்ற பெண்ணை தேடி கண்டுபிடித்து திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்”என்று மற்றொருவர் பதில் கடிதமும் எழுதி இருக்கிறார். இப்படி பரபரப்பிற்கும், வசூல் சாதனைக்கும் வழிவகுத்த அந்த கடிதத்தை, 30 ஆண்டுகளை கடந்திருக்கும் ‘எஜமான்’ திரைப்படத்தை கொண்டாடும் விதத்தில், அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் இன்று சமூக வலைத்தளத்தில் பொக்கிஷ பதிவாக வெளியிட்டுள்ளது.

– லிசா ஜேம்ஸ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குஜராத் : ஆர்டிஐ தாக்கல் செய்ய 10 பேருக்கு வாழ்நாள் தடை

Dinesh A

பெங்களூரில் ஒமிக்ரான், அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Halley Karthik

இளைஞர் ஓட ஓட வெட்டிக் கொலை; 4 பேர் கைது

G SaravanaKumar