”திராவிட இயக்கம் கலைகளால் வளர்ந்தது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கம் கலைகளால் வளர்ந்தது என்றும், கலையை சாமானிய மக்களுக்கும் உரியதாக மாற்றியது திராவிட இயக்கம்தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கிராமிய கலைஞர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் சென்னை சங்கமம் – நம்ம…

திராவிட இயக்கம் கலைகளால் வளர்ந்தது என்றும், கலையை சாமானிய மக்களுக்கும் உரியதாக மாற்றியது திராவிட இயக்கம்தான் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கிராமிய கலைஞர்களை ஒன்றிணைத்து நடத்தப்படும் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சியை சென்னை தீவுத்திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் இடம்பெற்ற பறையாட்டம், வில்லுப்பாட்டு, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைகளும் கலைஞர்களும் தலைநகரில் சங்கமிக்கும் நிகழ்ச்சியே சென்னை சங்கமம் நிகழ்ச்சி என தெரிவித்தார். திராவிட இயக்கம் கலைகளால் வளர்ந்தது எனக்கூறிய அவர், கலையை சாமானிய மக்களுக்கும் உரியதாக மாற்றியது திராவிட இயக்கம்தான் என்றும் குறிப்பிட்டார். கலைகள் பொழுதுபோக்காக இல்லாமல் மனதை மாற்றும் நிகழ்வாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சி வரும் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதியிலிருந்தும் 600க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர். சென்னையில் செம்மொழி பூங்கா, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.