தவறாக ஊசி செலுத்தியதால் ஏற்பட்ட பக்க விளைவுகளைச் சந்தித்த சிறுமிக்கு 22 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது உச்சநீதிமன்றம்
தமிழ்நாட்டை சேர்ந்த எழிலரசி என்ற சிறுமிக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்காக மருத்துவர் அசோக் குமார் என்பவர் பரிசோதனை செய்து சிறுமிக்கு ஊசி செலுத்தியுள்ளார். ஆனால், அந்த ஊசியால் ஏற்பட்ட பக்கவிளைவால் சிறுமிக்கு நரம்பு மண்டல பாதிப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை கடந்த 2000-ஆம் ஆண்டில் விசாரித்த மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் மருத்துவரின் தவறான சிகிச்சை முறையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டதோடு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
இதை எதிர்த்து மருத்துவர் தாக்கல் செய்த மனுவைத் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு 6% வட்டியுடன் 4 லட்ச ரூபாய் இழப்பீட்டைப் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவித்திருந்தது.
அண்மைச் செய்தி: ‘கஞ்சா போதையில் இளைஞரைக் கடத்திய இருவர் கைது’
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மருத்துவர் அசோக்குமார் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் சூரிய காந்த், ரவிக்குமார் அமர்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், நீதிபதிகள் மருத்துவ நிபுணர்கள் அல்ல. ஆனால், மருத்துவ நிபுணர்கள் வழங்கி இருக்கக்கூடிய அறிக்கைகளின்படி மருத்துவர் கவன குறைவுடன் இருந்திருக்கிறார் என்பது உறுதியாகிறது எனவே மனுவைத் தள்ளுபடி செய்வதாகவும் இழப்பீட்டுத் தொகையைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.








