இலங்கையில் அவசரநிலை பிரகடனம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோடிய நிலையில், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன்…

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவுக்கு தப்பியோடிய நிலையில், அந்நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

இன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கையில் இருந்து புறப்பட்ட அதிபர் கோத்தபய ராஜபக்ச, மாலத்தீவுக்குச் சென்றடைந்ததாகவும், அவர் ரகசிய இடத்தில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் அறிவித்திருந்தார்.

அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டு மாறும் அவர் பிரதமரை வலியுறுத்தி இருந்தார்.

இதையடுத்து கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருவரும் பதவி விலகும் நிலையில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று புதிய அரசு அமைக்கத் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா அறிவித்தது.

இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்ச இதுவரை அதிபர் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்று நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப அபேவர்த்தனா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இன்னும் ஒரு நாளில் ராஜினாமா கடிதம் கிடைத்துவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.