“சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு” – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகளைக் கட்டித் தருவதில் மட்டும் திமுக அரசு மெத்தனம் காட்டுவது ஏன்? என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “சமூகநீதி பேசிவிட்டு, கோபாலபுர நீதியை மட்டுமே தூக்கிப்பிடிக்கும் திமுக அரசு!

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணக்கந்தல் மோட்டூர் பகுதியில் இருளர் சமுதாய மக்களுக்கான தொகுப்பு வீடுகளை முறையாகக் கட்டித்தராமல், ஆதார், பட்டா, வாக்காளர் அடையாள அட்டைகளை வீசியெறிந்து போராடும் நிலைக்குப் பழங்குடியினரைத் தள்ளியுள்ளது திமுக அரசு.

தமது தந்தையின் நினைவுச்சின்னமாக வானுயர பேனா சிலை வைக்கவும், தமது மகனின் ஆசைக்காக கார் ரேஸ் நடத்தவல்ல சாலைகளை அமைப்பதற்கும், பணத்தை வாரி இறைக்கத் தயாராக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏழை எளிய பழங்குடியின மக்களுக்கான வீடுகளைக் கட்டித் தருவதில் மட்டும் மெத்தனம் காட்டுவது ஏன்?

பிரம்மாண்ட மேடைகளில் சமூக நீதி குறித்து பெருமையாகப் பேசுவதும், விளம்பரங்களில் சமூக நீதியின் காவலர்களாய்த் தங்களை முன்னிறுத்திக்கொள்வதும், நிதர்சனத்தில் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினத்தவர்கள் நலனைக் கடைக் கண் கொண்டும் காணாது அனுதினமும் அவர்களைப் போராட வைப்பதும் தான் அறிவாலய அரசின் வழக்கம்!

மொத்தத்தில், சொந்தக் குடும்பத்தின் விளம்பரத்திற்கு முக்கியத்துவமும், பழங்குடி சமுதாயத்தின் வாழ்வாதாரத்திற்குப் பாராமுகமும் காட்டும் திமுக அரசின் இந்தக் கொள்கையின் பெயர் சமூகநீதியல்ல, கோபாலபுர நீதி”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.