விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான அரசாணை 11-ம் தேதி வழங்கப்படும் – அமைச்சர் செந்தில் பாலாஜி

இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு…

இலவச மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பிற்கான அரசாணையை 11-ம் தேதி முதலமைச்சர் வழங்குகிறார் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் 50,000 விவசாயிகளுக்கு அரசாணை வழங்குகிறார் முதல் அமைச்சர் முக ஸ்டாலின். இதுகுறித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் இலவச மின்
இணைப்புகள் வேண்டி விண்ணப்பித்த 4,50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் பொருட்டு, கடந்த ஆண்டு 1 லட்சம் பேருக்கு அரசாணைகள் வழங்கப்பட்டது.

அதே போல, நடந்து முடிந்த சட்டமன்ற கூட்ட தொடரில் தெரிவித்தது போல மேலும் 50,000 விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்கு அரசாணையை வருகின்ற 11 ஆம் தேதி, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார். திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை சொன்னது சொன்னது போல நிறைவேற்றி வருகிறோம். எனவே நாங்கள் சொன்னது போல, கரூரில் வரும் 11 ஆம் தேதி 20,000 பேர் முதலமைச்சர் கையில் ஆணையை பெறுகிறார்கள். மீதம் உள்ள 30,000 பேருக்கு படிப்படியாக ஆணைகள் வழங்கப்படும்.

இதுகுறித்து எங்களுடைய மின் வாரிய அலுவலகத்தில் இருந்து இந்த ஆணையை பெறப்போகிற 50,000 விவசாயிகளுக்கு தொடர்பு கொண்டு இதனை தெரிவித்த போது, பல பேர் இதை நம்பவில்லை. நீண்டகாலமாக காத்திருக்கும் அவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஆணைகள் வழங்கப்படுவது குறித்து கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தனர். முன் பதிவு செய்ததன் அடிப்படையில், இந்த 50,000 பேருக்குமே இலவச மின் இணைப்புகளுக்கு உண்டான ஆணைகள் வழங்கப்படுகிறது.

இதில் இருந்து 100 பேர் வரவில்லை என்றாலும் கூட அடுத்து இருக்கின்ற 100 பேருக்கு இந்த ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த ஒரு நம்ப முடியாத திட்டத்தை நாங்கள் இந்த ஆட்சியில் செயல்படுத்தி வருகிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.