கேரளாவிலுள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயில் குளத்தில் 70 ஆண்டுகளாக சைவ உணவை மட்டும் உண்டு வாழ்ந்து வந்த முதல் நேற்று இறந்தது.
கேரள மாநிலம் காசர்கோடு அருகே அனந்தபத்மநாப சுவாமி கோயில் அமைந்துள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அனந்தபத்மநாப சுவாமி கோயிலின் மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலுக்குச் சொந்தமான குளத்தில் 70 ஆண்டுகளாக பபியா என்ற முதலை வாழ்ந்து வந்தது.
அடிக்கடி கோயில் பிரகாரங்களை சுற்றி வருவதை வழக்கமாகக் கொண்ட பபியா, சுத்த சைவமாக கோயிலில் தயாரிக்கப்படும் பிரசாதங்களை மட்டுமே உணவாக உண்டு வந்தது. தெய்வீக முதலையாக கருதப்படும் பபியா, இதுவரை யாரையும் தாக்கியதில்லை என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக பபியா காணமற்போன நிலையில், நேற்று குளத்தில் முதலை இறந்து கிடந்தது. இதனையடுத்த மறைந்த பபியாவின் உடல் பொதுமக்களின் அஞ்சாலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் இணையதளத்தில், ‘கோயில் குளத்தில் இத்தனை ஆண்டுகள் ஒரே ஒரு முதலை வாழ்ந்தது வியப்பிற்குரியது. குளத்தில் ஒரு முதலை இறந்ததும் அடுத்து ஒரு முதலை தோன்றுவது அதிசயமான நிகழ்வு. அந்த வரிசையில், இறந்த பபியா, இந்த குளத்தில் வசித்த மூன்றாவது முதலை. இக்கோயிலின் அருகே வேறு குளமோ, ஆறோ இல்லை. இந்நிலையில், இக்குளத்தில் முதலை வாழ்ந்து வந்தது அதிசயம். கோயிலையே சுற்றி வந்த பபியா, பாகவத புராணத்தில் வரும் கஜேந்திர மோட்ச கதையை நினைவுபடுத்துகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக உப்பு நீரில் வாழும் முதலைகள் 70 ஆண்டுகள் வரையிலும், நன்னீர் முதலைகள் 50 முதல் 60 ஆண்டுகள் வரையிலும் உயிர்வாழும். இந்நிலையில் ஒரே குளத்தில், சைவ உணவுகளை மட்டுமே உண்டு, 70 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த பபியா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.







