கேரளாவில் பெண்கள் இரவு நேரத்தில் சுதந்திரமாக வெளியில் வரும் வகையில் அவர்களுக்கு நம்பிக்கை மற்றும் தைரியத்தை ஏற்படுத்துவதற்காக மூவாற்றுப்புழாவில் 4 நாட்கள் இரவு திருவிழா நடத்தப்பட்டது.
மூவாற்றுப்புழா தொகுதி எம்எல்ஏ மேத்யூ முயற்சியின் பேரில் இந்த விழா நடைபெற்றது. 4 நாட்களும் மாலை 5.30 மணிக்கு தொடங்கிய விழா இரவு 11.30 மணி வரை நீடித்தது. இந்த விழாவில் பெண்கள், மாணவிகள் ஒவ்வொரு நாளும் ஒன்று கூடி ஊர்வலம் நடத்தினார்கள்.
ஆடல், பாடல் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்றனர்.
இந்த விழா பெண்களுக்கு மிகவும் தைரியம் அளிப்பதாக இருந்தது. இந்த விழாவுக்கான முயற்சிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ கூறியதாவது:
பெண்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அவர்களை வீட்டில் அடைத்து வைக்கக் கூடாது. அலுவலகம் செல்லும் பெண்கள், பணி நிமித்தமாக இரவில் வெளியே செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அந்த நோக்கத்தில்தான் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்றனர். உங்கள் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றி என்றார் மாத்யூ.









