விவாகரத்தான மனைவி வளர்க்கும் நாய்களுக்கும் சேர்த்து ஜீவனாம்சம் தர உத்தரவிட்ட நீதிமன்றம்!

விவாகரத்தான மனைவிக்கும், அவர் வளர்க்கும்  3 நாய்களுக்கும் சேர்த்து ரூ.50,000 மாத ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து…

விவாகரத்தான மனைவிக்கும், அவர் வளர்க்கும்  3 நாய்களுக்கும் சேர்த்து ரூ.50,000 மாத ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 55 வயதான பெண் ஒருவருக்கும், அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு அந்த பெண், குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தனது வயது, உடல் நிலை பிரச்னை மற்றும் தான் வளர்க்கும் 3 நாய்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தனது கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரினார்.

பெண் சார்பில் இந்த வழக்கில் ஆஜரான வக்கீல் பின்வருமாறு வாதிட்டார்.

”இரு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இவர்களின் திருமணமான இரண்டு மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர். கடந்த 2021-ம் ஆண்டு பெண்ணை பிரிந்த கணவர் பராமரிப்பு மற்றும் பிற அடிப்படை தேவைகளை வழங்குவதாக உறுதி அளித்தார். ஆனால் அதை அவர் பின்பற்றவில்லை.  மேலும் அவர்கள் பிரிவதற்கு முன் அந்த பெண் மீது கணவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த பெண்ணுக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. அவருக்கு சில உடல் நிலை பிரச்னைகளும் உள்ளது. மேலும் அவர் 3 நாய்களை வளர்த்து வருகிறார். அதே நேரம் மனைவியை பிரிந்த நபர் தற்போது வேறு ஒரு நகரத்தில் தொழில் செய்து வருகிறார். அவருக்கு வருமானமும் வருகிறது. எனவே அவர் இடைக்கால பராமரிப்பு செலவாக மாதம் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்” இவ்வாறு வாதிட்டார்.

ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அந்த பெண்ணின் கணவர் மறுத்தார். மேலும் தனக்கு நிலையான வருமானம் எதுவும் இல்லை என கூறிய அவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் பராமரிப்பு தொகையை வழங்க முடியாது என கூறினார்.

இருவரின் வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் கணவரின் வாதத்தை ஏற்க மறுத்தது. மேலும் குடும்ப வன்முறைக்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, அந்த பெண் இடைக்கால நிவாரணத்திற்கு தகுதி பெற்றவர் என தெரிவித்தார். மேலும் மனிதர்கள் ஆரோக்கியமான வாழ்வை வாழ வளர்ப்புப் பிராணிகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, அந்த பெண் வளர்க்கும் 3 நாய்களுக்கு ஆகும் பராமரிப்பு செலவை கொடுக்க வேண்டும் என கணவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.