கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப விநியோக நடைமுறைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு நியாய விலைக் கடைப்பகுதியிலும் ஒரு விண்ணப்ப பதிவு முகாம் அமைக்கப்பட வேண்டும். அந்த நியாய விலைக் கடையில் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு 500 குடும்ப அட்டைக்கும் ஒரு விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் ( Application Registratering Volunteer ) நியமிக்கப்படுவார்.
1400 குடும்ப அட்டைகள் உள்ள ஒரு நியாய விலைக் கடையில் மூன்று விண்ணப்பதிவு தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். விண்ணப்பப் பதிவு விரைவில் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் மூன்று தன்னார்வலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு நியாய விலை கடைப்பகுதி விண்ணப்பப் பதிவு முகாமின் முகாம் பொறுப்பு அலுவலராக (Camp Incharge Officer), ஒரு அலுவலர் மட்டும் நியமிக்கப்பட்டால் போதுமானது.
கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர், மக்கள் நலப் பணியாளர், நகராட்சிப் பகுதிகளில் வரி வசூலிப்பாளர், சுகாதார ஆய்வாளர், சுகாதார அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர் போன்ற நகராட்சி பணியாளர்களை முகாம் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கலாம்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.







