2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் டாலர் அளவிற்கு வளர வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் ISBA-யின் 14வது மாநாடு சென்னை பழவந்தாங்கலில் தொடங்கியது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிற்கான இன்குபேஷன் ரூட் மேப் வரைபடத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர்கள் சக்தி கொண்ட மாநிலமான தமிழ்நாட்டை புதிய தொழில் மூலமாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
விண்வெளி, மின்வாகனம் உள்ளிட்ட துறையில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்க முடிவு செய்து உள்ளதாக கூறிய அவர், புதிய நிறுவனங்களுக்கு தொழில், திறன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தொழில் வளர்ச்சி நிதியை மட்டுமல்ல, தமிழ்நாடு அரசு சமூக நீதியையும் நிலை நிறுத்தும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 1 டிரிலியன் டாலர் அளவிற்கு வளர வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவ்வாறு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் வளர வேண்டும் என்றால் ஆயிரக்கணக்கான புதிய தொழில் முனைவோர்களையும் தொழில் நிறுவனங்களையும் உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.








