பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்ற விவகாரதத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மாநில ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு பாடத்திற்கான தேர்வில் சாதி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வி இடம் பெற்று இருந்தது. இது பல்வேறு தரப்பினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்தக் கேள்வி இடம்பெற்றதற்கு பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சை கேள்வி குறித்து தாமாக முன்வந்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளதோடு, பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர், வரலாறு துறைத்தலைவர் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுபோன்ற செயல்களில் பல்கலைக்கழகங்கள் போன்ற பொது அமைப்புகள் ஈடுபடுவதை எந்த வகையிலும் சகித்துக்கொள்ள முடியாது என்றும், இதை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி இதுபோன்ற செயல் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும். வினாத்தாளை சரிபார்க்க வேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ய தவறி உள்ளனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.








