தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சியின் நிலை பார்வையாளர் என்கிற இடத்தில் இருப்பதாகவும், பங்கேற்பாளர்களாக மாற வேண்டும் என்றும் அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்விக்கு, வசந்த் அன் கோ நிறுவனத்தை வெற்றிகரமான முறையில் நடத்துவதற்காகவும் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்ததற்காகவும் விருது வழங்கி
கவுரவிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, “தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை பார்வையாளர் என்கிற இடத்தில் இருக்கிறது. பார்வையாளர்கள் என்பவர் எதையும் பேராசையாகப் பார்ப்பவர்கள் அவ்வளவு தான். நாம் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது பங்கேற்பாளர்கள் ஆக இருக்க வேண்டும். ஒன்றைப் பெறுவதும் மற்றொன்றைக் கொடுப்பதிலும் தான் அரசியல் இருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் நமக்கு 72 % தொகுதி வாக்குகள் கிடைத்ததால் தான் நாம் மரியாதையோடு பார்க்கப்பட்டோம். வாக்கு சதவீதம் குறைந்தால் கண்டிப்பாக விமர்சனம் எழும் இதுதான் எதார்த்தம்” என்று பேசினார்.







