திண்டுக்கல்லில் கைக்குழந்தையுடன் இலவச பேருந்தில் பயணம் செய்த பெண்ணை மதுபோதையில் இருந்த நடத்துநர் கீழே இறக்கிவிட்ட வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கலில் இருந்து மாமரத்துபட்டி செல்லும் அரசுப் பேருந்தில் யசோதா தேவி என்பவர் தனது மகன் தரணிதரன் மற்றும் கைக்குழந்தையுடன் பயணம் செய்துள்ளார். பெண்களுக்கு பேருந்தில் இலவசம் என்ற நிலையில் நடத்துநரான பால்பாண்டி யசோதா தேவியை பயணச்சீட்டு வாங்குமாறு கூறியுள்ளார். அதற்கு யசோதா தேவி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது என கூறியுள்ளார்.
இதனையடுத்து நடத்துநர் அவரின் இரண்டரை வயது மகன் தரணிதரனுக்கு பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பெண்களுக்கு இலவச பயணம் என்றாலும் பயணச்சீட்டு எடுத்தால் பயணம் செய்யலாம். இல்லையென்றால் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை விட்டு இறங்குமாறு கூறியுள்ளார்.
அப்பகுதியில் கனமழை பெய்து வருவதை கூட பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் கைக்குழந்தையுடன் யசோதா தேவியை நடத்துநர் அடுத்த பேருந்து நிறுத்தத்தில் தகாத வார்த்தைகளால் பேசி இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோவாக எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டனர். வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பேருந்தின் நடத்துனர் பால்பாண்டி பணி நேரத்தின் போது மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் என்று அறிவித்தும் இவ்வாறு செயல்படும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.








