அரசு அலுவலகத்தில் புகைபிடித்த அதிகாரியை பணியிடை நீக்கம் செய்த ஆட்சியர்

மதுரையில் அரசு அலுவலகத்தில், பணி நேரத்தில் புகைபிடித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர் ராஜன் என்பவர்…

மதுரையில் அரசு அலுவலகத்தில், பணி நேரத்தில் புகைபிடித்த வட்டார வளர்ச்சி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றிய அலுவலகத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர் ராஜன் என்பவர் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு மேலாக இந்த அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அலுவலக நேரத்தில் அலுவலக வளாகத்திற்குள் புகை பிடிப்பது போன்று புகைப்பட ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியருக்கு புகாரானது வந்துள்ளது.

மேலும் அவர் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் விசாரணை நடத்த மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புகைப்பிடித்த குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனால் பணி நேரத்தின்போது ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தர் ராஜனைப் பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சௌந்தர் ராஜன் மதுரை மாவட்டத்தை விட்டு அனுமதி இன்றி வேறு மாவட்டங்கள் செல்லக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.