தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் துவக்க விழா அடுத்த மாத இறுதியில் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சட்டமன்றத்தில் துறைரீதியாக அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகள் தொடர்பாக விளையாட்டுத் துறையைக் கவனிக்கும் செய்தியாளர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் துறையின் செயலாளர் அத்துல்யா மிஸ்ரா,உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் பல்வேறு ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘ செஸ் ஒலிம்பியாட் தொடரை மற்ற நாடுகள் நடத்துவதற்கு இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை காலம் எடுத்துக் கொள்ளும் நிலையில், அதை தமிழ்நாடு அரசு 4 மாத காலத்தில் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து திட்டமிட்டபடி நடத்தி முடித்திருக்கிறது.
அதை மையமாக வைத்தே அனைத்து தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளைத் தமிழ்நாட்டில் நடத்த பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். குறிப்பாக ஆசிய கடற்கரை கைப்பந்து போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்த திட்டமிட்டு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். அந்த வகையில் அனுமதி வழங்கப்பட்டால் செஸ் ஒலிம்பியாட் போல் மிகப்பெரிய அளவில் இந்த போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்படும் என கூறினார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்தப் பொதுமக்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நேரடியாக நிதி உதவியை பெரும் வகையில் தமிழ்நாடு சேம்பியன் அறக்கட்டளை துவங்கப்படவுள்ளது. இதற்காக அரசின் சார்பில் மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரைத் தலைவராகக் கொண்டு இந்த அறக்கட்டளை துவங்கப்படும் என்றும் இதன் துவக்க விழா நிகழ்ச்சி அடுத்த மாத இறுதியில் மிகப்பிரமாண்டமாக நடத்தப்படும் என்றார்.
மேலும் அறக்கட்டளையைப் பிரபலப்படுத்த பிரத்யேக பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதன் தூதுவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியை நியமிக்க முயன்று வருவதாக கூறினார்.
விளையாட்டுத் துறை சார்ந்த அனைத்து சிக்கல்களும் படிப்படியாகத் தீர்க்கப்பட்டு வருகிறது என்றும் விரைவில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வழியில் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு நெறிப்படுத்தப்படும் எனக் கூறினார். இத்தோடு ஒவ்வொரு மூன்று மாத கால இடைவெளியில் செய்தியாளர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.







