ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசியை ஓர் இடத்திலிருந்து வேறு இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதியைத் தெலுங்கான அரசுக்கு மத்திய விமானத்துறை வழங்கி உள்ளது.
இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்திய அளவில் 3,82,315 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,780 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்திய அளவில் 2,06,65,148 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் இதுவரை 2,26,188 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலமாக கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்ற முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கான அரசுக்கு ஒரு முக்கிய அனுமதியை, மத்திய விமானத்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது.
ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு செல்வதற்கான சோதனைக்குத் தெலுங்கான அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த கொரோனா தடுப்பூசிகள் முதலில் ட்ரோன் மூலம் கொண்டு செல்லப்பட உள்ளது என்ற தகவல் இன்னும் வெளியாக வில்லை. இந்த சோதனை முயற்சி வெற்றிபெறுமாயின் இது ஒரு சிறப்பான திருப்புமுனையாக அமையும் என்று தெலுங்கான அரசு தெரிவித்துள்ளது.







