பிறக்கும் போதே உயிரிழந்துவிட்டதாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை, அடக்கம் செய்யும் போது உயிருடன் இருந்தது தெரியவந்துள்ளது.
தேனி மாவட்டம். பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் பேரூராட்சியை சேர்ந்தவர் பிலவேந்திரன் ராஜா. இவரது மனைவி பாத்திமா மேரி பிரசவத்துக்காக தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப் பட்டிருந்தார். அவருக்கு குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே இறந்துவிட்டதாக குழந்தையை, பெற்றோரிடம் மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது.

சோகமான அவர்கள், குழந்தையை அடக்கம் செய்வதற்காக பெரியகுளம் கல்லறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அடக்கம் செய்வதற்கு முன்பு குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் குழந்தைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







