பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் கேகயான் டி ஓரோ (Cagayan de Oro city) நகரத்தில் இருந்து ராணுவத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 3 விமானிகள் உட்பட 92 பேருடன் சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ (Jolo) தீவுக்கு வந்து கொண்டிருந்தது. விமானத்தில் இருந்தவர்களில் 85 பேர் புதிதாக ராணுவ பயிற்சியை முடித்தவர்கள்.
விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விமான விபத்து பயங்கரவாத தாக்குதலால் ஏற்படவில்லை என்றும் மீட்பு பணி முழுமையாக முடிந்த பிறகு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.







