தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிகழ்வு பட்டினப் பிரவேசம் என்றும், அனைவரின் அன்பைப் பெற்ற ஆதீனத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய்த்துறை தடை விதித்திருப்பது சரியானது அல்ல என்றும், பாரம்பரிய நிகழ்வுக்கு தடை விதித்துள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வு என்பது சுமார் 400 ஆண்டுகளாக இருப்பது என்றும், அதற்கு தடை விதித்திருப்பது சரியானது என்றும் 18 ஆதீனங்களையும் அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். இதனால், செல்வப்பெருந்தகையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூச்சலிட்ட நிலையில், குறுக்கிட்ட அவை முன்னவர் துரைமுருகன் அனைத்து கட்சியினருக்கும் அவரவர் கருத்தைக் கூறும் உரிமை உண்டு என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாமக எம்.எல்.ஏ., ஜி.கே.மணி, பாஜக எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் ஆகியோர் மதம் சார்ந்த நிகழ்வுக்கு தடை விதித்துள்ளது தவறானது என்றும், தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அண்மைச் செய்தி: ‘தமிழ்நாட்டில் இன்று தொடங்குகிறது கத்திரி வெயில்’
சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்களுக்கென தெய்வீகப்பேரவையை உருவாக்கியது கருணாநிதி தான் என்றும், மாநிலத்தில் உள்ள 45 மடங்களில் சைவ, வைணவ வழிபாடுகள் நடைபெற்று வருவதாகவும், திருத்தேர் உருவாக்கும் பணி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை ஆதீனத்தை வைத்தே அரசு தொடங்கியதாகவும், தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டினப் பிரவேசம் வரும் 22-ஆம் தேதி நடைபெறவிருப்பதால், அதற்குள்ளாக ஆதீனத்துடன் பேசி முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.