சமஸ்கிருத சர்ச்சை; டீன் மீதான நடவடிக்கை ரத்து

சமஸ்கிருதத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

சமஸ்கிருதத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல், மீண்டும் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருத மொழியில் உறுதிமொழி ஏற்ற விவகாரம் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.
தீர்மானத்தில் பேசிய எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்றது போல் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியிலும் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வழக்கமாக எடுக்கும் ஹிப்போக்ரேடிக் உறுதிமொழிக்கு பதில் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்ற செய்தி கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதியே பரவியதாகவும், உடனடியாக அதுபோன்று சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தால் மொழிப்பிரச்சனை ஏற்படும் என்றும், அவ்வாறு எடுக்கக்கூடாது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அறிவுறுத்தியிருந்ததாகவும், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தாங்கள் எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் விளக்கமளித்துள்ள நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரியில் மகரிஷி சரக் சபத் உறுதிமொழி எடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து உடனடியாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, துறை சார்ந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: ‘தருமபுரம் ஆதீனம்; முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் – இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு’

மதுரை மருத்துவக்கல்லூரியின் முதல்வர் ரத்தினவேல் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர் என்றும், நடந்த தவறுக்கு அவர் வருத்தம் தெரிவித்துவிட்டதால் முதலமைச்சரின் உத்தரவுப்படி, ரத்தினவேல் மீண்டும் மருத்துவக்கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், எதிர்காலத்தில் எவ்வாறு பணியாற்றுவது என்பது தொடர்பாக அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.