பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து இன்னும் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை என்றும், முதலமைச்சர் அது குறித்து அறிவிப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற
உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி சென்னை, பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்ற வளாகத்தில் திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சக்கரபாணி, சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “இளைஞர் அணி செயலாளர் பிறந்த நாள் ’மனிதநேய உதய நாள்’ என்ற தலைப்பில் மாவட்ட இளைஞர் அணி சார்பில் மூன்றாவது ஆண்டாக நடத்தப்படுகிறது. இந்த வருடம் தொடர்ந்து 15 நாள் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று ஆறாம் நாள் நிகழ்ச்சியாக திமுக முன்னோடி உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த பிறந்தநாளால் என்ன நன்மை என்று மாற்று கருத்து கொண்டவர்கள் வசைபாடுவார்கள். இன்னும் அரைநூற்றாண்டு கழகத்தை இழுத்து செல்வதற்கு, நான்காம் தலைமுறையை எடுத்து செல்வதில் வெற்றி கண்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். தமிழகம் முழுவதும் நேற்று ஒரு நாள் லட்சோப லட்ச மக்கள் பயனடைந்து உள்ளனர். உதயநிதியை மக்கள் எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, “கருணாநிதி, ஸ்டாலின் பிறந்த நாள் நிகழ்ச்சி, தை பொங்கல் நிகழ்ச்சி என எந்த நிகழ்ச்சி என்றாலும் சிறப்பாக நடத்தி வருகிறார், அமைச்சர் சேகர் பாபு. இன்று இயக்கத்திற்கு இரண்டாவது முறையாக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலினை அடுத்து அனைத்து தேர்தல்களிலும் சூறாவளி பிரச்சாரம் செய்து, இயக்கத்திற்கு வலிமை சேர்த்தவர் உதயநிதி ஸ்டாலின்.
சட்டமன்ற உறுப்பினராக , இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பின் அந்த பகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகிறார். அவர் பிறந்தநாளில் அவரை பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். பட்டி தொட்டி எல்லாம் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இல்லம்தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணியில் சேர்க்க பாடுபட்டு வருகிறார். அனைத்து தொகுதிகளிலும் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் நடத்தியவர். பயிற்சி பாசறை கூட்டம் இனி ஒவ்வொரு ஊராட்சியிலும் நடக்க உள்ளது. முதலமைச்சரின் முயற்சியால் மாற்றுத்திறனாளிகள் கூட கடல் அலையை பார்த்து ரசித்ததை அனைவரும் கண்டோம். தந்தை பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு தியாகங்களைச் செய்து இருக்கிறார்கள்.
சென்னையை கடந்த காலத்தில் திமுகவின் கோட்டை என்பார்கள். அது மீண்டும் இன்று உருவாகி இருக்கிறது. அதற்காக உழைத்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். கலைஞர் மறைவுக்கு பின் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது என்றனர். அதனை நிரப்பி சிறப்பாக செயல்பட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின். தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதிகளில் 70 சதவிகிதத்திற்குமேல் நிறைவேற்றி இருக்கிறது இந்த அரசு. 9 மாவட்டங்களில் நடந்த உள்ளாட்சி தேர்தல், நகராட்சி தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று உள்ளது” என்று பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, ”கலைஞர் பிறந்தநாள் ஆனாலும் சரி. ஸ்டாலின் பிறந்த நாள் என்றாலும் சரி. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் ஆனாலும் சரி. அனைத்திற்கும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அண்ணா, கலைஞர், ஸ்டாலின் வழியில் இயக்க கோட்பாடுகளை உள்வாங்கி உதயநிதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒன்றியங்கள் தோறும் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இன்னும் நீண்ட காலம் வாழ்ந்து இயக்கத்திற்கும் நாட்டிற்கும் அவர் பெருமை சேர்க்க வேண்டும். உதயநிதி அமைச்சராக வந்தால் இன்னும் நல்லதாக இருக்கும் என்பதுதான் எங்களது விருப்பம்.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து எவ்வித ஆலோசனைக் கூட்டமும் இதுவரை நடைபெறவில்லை .பொங்கல் தொகுப்பு குறித்து முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பின்னர் அறிவிப்பார். பொங்கல் தொகுப்பில் கடந்த வருடம் நடந்த குளறுபடிகள் இந்த வருடம் நடைபெறாது. சென்ற ஆண்டு வழங்கப்பட்ட தொகுப்பு குறித்து வந்த குற்றசாட்டுகளில் இரண்டு தான் நிரூபிக்கப்பட்டது. அதை செய்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
ஏற்கனவே நெல் கொள்முதல் 17% இருந்ததை, 22% உயர்த்தி தர ஒன்றிய அரசிடம்
கேட்டோம். அவர்கள் ஆய்வு செய்து 19 சதவிகிதமாக அதிகரித்துள்ளனர். மீண்டும் வரும் மழைக்காலங்களில் தேவைப்படும் பட்சத்தில், ஈரப்பதத்தை அதிகரிப்பது தொடர்பாக மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்” என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு, தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். மலைக்கோவில்கள் மற்றும் அதிகம் பக்தர்கள் வரும் கோவில்களில் மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 5 திருக்கோவில்களுக்கு இதனை அறிவித்தோம். திருக்கோவில் வளாகத்தில் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படாது. மாறாக வெளிப்புற இடங்களில் தான் வைக்க உள்ளோம். இதன் நோக்கம் விலைமதிப்பற்ற உயிர்களை காக்க வேண்டும் என்பதற்காகதான். உயிர் காக்கும் மருத்துவ சேவை அடங்கிய உன்னதமான திட்டம் இது. இதற்கு தடைக்கல்லாக இல்லாமல் படி கல்லாக இருக்க வேண்டும் என்று அந்த அமைப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.







