திருச்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ரூ.25 கோடி செலவில் “வானவில் மன்றம்“திட்டத்தை தொடங்கி வைத்தார்.பின்னர், நடமாடும் அறிவியல் ஆய்வக வாகனத்தையும், மோட்டார் சைக்கிள்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களின் செயல்பாட்டினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள வானவில் மன்ற திட்டத்தின் நோக்கம் என்ன? என்பது பற்றி தற்போது காணலாம்…
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1) வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதே ஆகும்.
2) இத்திட்டம் மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் என்றும்,
3) எதையும் ஆராய்ந்து பார்த்து, கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4) அறிவியல், கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் ஆர்வத்தை உருவாக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
5) குழந்தைகளிடையே இயல்பாக உள்ள படைப்பாற்றலை ஊக்குவித்து, புதுமை காணும் மனப்பாங்கை வளர்த்தெடுக்கவும்,
6) அன்றாட வாழ்க்கையில் இருக்கும் அறிவியலை உணர செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
7) இத்திட்டத்தின் மூலம் வகுப்பறை கற்பித்தலை எளிதாக்கவும், திட்டத்தை கையாளும் வழிமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8) இதற்கென 710 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் கட்டமாக 100 இருசக்கர வாகனங்கள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
9) நடமாடும் வாகனம் மூலமாக 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பரிசோதனை கருவிகளை உடன் எடுத்து சென்று, பள்ளிகளில் ஆசிரியர்களின் துணையுடன் கருத்தாளர்கள் பரிசோதனை செய்து காண்பிப்பார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
10) அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த இடங்களுக்கு மாணவர்களை அழைத்து சென்று, நேரடி அனுபவம் பெறுவதற்கும் திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11) அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் எதிர்வரும் காலங்களில் தங்களின் அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடங்களில் முழுமையான படைப்பாற்றல்களை வெளிக்கொணர வானவில் திட்டம் வழிவகுக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.