இந்துக்களுக்கும், இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படவேண்டும் என மன்னார்குடி ஜீயர் செண்பகராம செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மன்னார்குடி செண்பகராம செண்டலங்கார ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டராக இருந்து செயல்பட கூடாது என தெரிவித்தார்.
திமுக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், பழனி கோயிலில் ஆரத்தி எடுப்பதற்கு கூட அரசு அனுமதி இல்லை என தெரிவித்திருப்பது கண்டனத்துக்குரியது என கூறினார்.
இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்றார். குஜராத்தை போன்று தமிழ்நாட்டிலும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்து கடவுள்களை பேசினால் மட்டும் எந்த ஒரு அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம்சாட்டிய செண்பகராம செண்டலங்கார ஜீயர், தீவிரவாதம் மற்றும் தேசவிரோதிகள் தமிழக அரசு பக்கம் நெருங்குவதற்கு பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.







