‘வரும்முன் காப்போம்’ திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
சேலம், தருமபுரியில் முதலமைச்சர் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதில் பல நலத்திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னையிலிருந்து விமானம் மூலம் சேலம் செல்லும் முதலமைச்சர் ‘வரும்முன் காப்போம்’ மருத்துவத் திட்டத்தை வாழப்பாடியில் தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து ஆத்தூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தைத் திறந்து வைப்பதுடன், புதிய அரசு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில், உழவர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 28 கோடியே 99 லட்சம் மதிப்பில் 28 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, போக்குவரத்துத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை போன்ற துறைகளில் 23 கோடியே 28லட்சம் ரூபாய் மதிப்பில் 13 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நவீனப்படுத்தப்பட்ட தனியார் ஜவ்வரிசி ஆலையைப் பார்வையிட்டு, ஜவ்வரிசிக்கான சில்லறை ஏலப் பிரிவினை தொடங்கி வைத்து, சேலம் கருப்பூர் சிட்கோவில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை பார்வையிட்டு, விசைத்தறி கூட்டமைப்பினருடன் கலந்துரையாடுகிறார்.
இதனைத் தொடர்ந்து நாளை தருமபுரி செல்லும் அவர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய கட்டடங்களையும், மருத்துவப்பிரிவுகளையும் தொடக்கிவைக்கிறார். தருமபுரியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை ஆய்வு மேற்கொள்ளும் முதலமைச்சர், பழங்குடியினர் வசிக்கும் வத்தல் மலை பகுதியில் பழங்குடியினர், விவசாயிகளுடன் கலந்துரையாடி நலத் திட்ட உதவிகள் வழங்குகிறார்.