“போதைப்பொருள் நெட்ஒர்க்கை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் ஒழிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை இன்று 12 நாட்கள் சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் திருச்சியல் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்பின் விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

“தனது பொதுவாழ்வில் தமிழ்நாட்டில் தனது காலடி படாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடைபயணம் செய்தவர் வைகோ. ஒரு இளைஞருக்குரிய ஊக்கத்தையும், உத்வேகத்தையும் நாம் வைகோவிடம் பார்க்கிறோம். 82 வயதாகிறதா? 28 வயதாகிறதா என்று சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கின்றன.

இந்த நடைபயணத்தில் எந்த பயன் இருக்கிறது எனக் கேட்கலாம். இந்த நடை பயணங்களால் தான் தலைவர்கள் மக்களிடம் எளிய முறையில் சென்று தங்களது கருத்துகளை சொல்ல முடியும். அப்போது தான் நடைபயணத்தின் தேவையை மக்கள் பேசுவார்கள்.

இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருளை நாம் நிச்சயமாக ஒழிக்க வேண்டும். இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. போதைப்பொருள் பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்ஒர்க் என்பதால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து தான் ஒழிக்க முடியும். மாநிலம் விட்டு மாநிலம் போதைப்பொருள் கடத்தப்படுவதை மத்திய அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். அதற்கு மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.

திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து 1 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதை ஒழிப்பில் கலைத்துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் வழித்தவறி போகாமல் பெற்றோர், சகோதரர்கள் கண்காணிக்க வேண்டும். பிள்ளைகளை பொறுப்புடன் வளர்க்க வேண்டும். குழந்தைகள் வழித்தவறி செல்லாமல் தடுக்க வேண்டும் என்றால் அவரைகளிடம் மனம் விட்டு பேசுங்கள்.

சாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் பொறுப்புகளில் உள்ளவர்களே பேசுகிறார்கள். அன்பு செய்ய வேண்டிய ஆன்மிகத்தை வைத்து வம்பு செய்கின்றனர். மது போதையையும், மத போதையையும் தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்க வேண்டும். உங்களின் நோக்கம் பெரிது என்றாதும், உங்கள் உடல்நலம் பெரியது. இந்த பயணத்தை நீங்கள் கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். உங்கள் நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.