அமெரிக்காவில் 9 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன பூனை ஒன்று, தனது உரிமையாளரிடம் மீண்டும் சேர்ந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகளை மிகவும் பாசத்துடன் வளர்க்கும் பலர், அது தொலைந்து போகும்போது படும் வேதனை, பெற்ற தாய் தன் குழந்தையை தொலைத்ததற்கு இணையாக இருக்கும். அவ்வாறு தொலைந்து போனால், அவை திரும்பக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த வகையில், அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவில் ஒரு பெண் 9 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தனது பூனையுடன் தற்போது மீண்டும் இணைந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஹென்ரிகோ காவல்துறையினர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். அதில், பைப்பர் என்ற பூனை தனது உரிமையாளரோடு, 9 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சவில்லை! – நியூஸ்7 தமிழுக்கு குஷ்பு பிரத்யேக பேட்டி
கடந்த பிப்.21ம் தேதி, ஹென்ரிகோ காவல்துறையின் விலங்கு பாதுகாப்பு பிரிவுக்கு, ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்துள்ளது. அதில், பூனை ஒன்று தங்களின் வீட்டின் முற்றத்தில் நின்றுகொண்டிருப்பதாகவும், அந்த இடத்தை விட்டு எங்கும் செல்லாமல் இருப்பதாகவும் புகாரளிக்கப்பட்டது.
அதன் பேரில், விலங்கு பாதுகாப்பு பிரிவினர், சம்பவ இடத்திற்கு சென்று அந்த பூனையை கைப்பற்றி, சோதனை செய்ததில், அதனிடம் மைக்ரோசிப் ஒன்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், பூனையின் உரிமையாளரை கண்டுபிடித்து, தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த பூனை தனது உரிமையாளரிடம் 9 ஆண்டுகளுக்குப் பின் சேர்ந்துள்ளது.
பைப்பரை, அதன் உரிமையாளரிடம் சேர்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக ஹென்ரிகோ காவல்துறையினர் தெரிவித்ததோடு, அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் மைக்ரோசிப் பொருத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு செய்தியையும் கொடுத்துள்ளனர். பைப்பர் தனது உரிமையாளருடன் இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.