முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது நடவடிக்கையின் பின்னணி என்ன?

மதுபான விற்பனை தொடர்பான கொள்கைகளை மாற்றியமைத்து முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது நாடெங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் இது கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம். 

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ்சிசோடியா பல்வேறு இலாகாக்களுக்கு பொறுப்பு வகிக்கிறார்.  அதில் ஒன்று கலால் வரித்துறை. அத்துறைக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தும் வகையிலும் தனியார் மது விற்பனை வியாபாரிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் வகையிலும் மது விற்பனை தொடர்பான கொள்கைகளை மாற்றி அமைத்தார் என்பதே மணிஷ் சிசோடியா மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

 நிபுணர் கமிட்டி ஒன்று அமைத்து அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் டெல்லியில் மதுவிற்பனை தொடர்பான கொள்கையில் பல்வேறு மாற்றங்களை டெல்லி அரசு கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 17ந்தேதி அறிமுகப்படுத்தியது. அ்ந்த  2021-2022ம் ஆண்டு  கலால் வரி கொள்கை மாற்றத்தின் அடிப்படையில் டெல்லியில் மது விற்பனை நடைமுறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. டெல்லி 32 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் அதிகபட்சம் 27 மதுவிற்பனை உரிமங்கள் வீதம் 849 உரிமங்கள் கொடுக்கப்பட்டன.

மதுபானக் கடைகளை அதிகாலை 3 மணி வரை திறந்திருக்க அனுமதிப்பது, மதுபானங்களின் விலையை வியாபாரிகளே நிர்ணயம் செய்ய அனுமதிப்பது என பல்வேறு தளர்வுகள் 2021-2022 கலால் வரிக்  கொள்கையில் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் மது விற்பனையில் உள்ளக்கட்டுப்பாட்டை டெல்லி அரசு முற்றிலும் கைவிட்டு அதனை தனியார்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் கலால் வரி கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக டெல்லி அரசுக்கு 2,800 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கொரோனா அச்சுறுத்தல் நிலவிக்கொண்டிருந்த நிலையில் மதுபான விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது குறித்தும் விமர்சனம் எழுந்தது. மதுபான விற்பனை கொள்கைகளை தளர்த்தியதற்கு கைமாறாக மணிஷ் சிசோடியாவிற்கு தனியார் மதுபான விற்பனை நிறுவனங்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை ஆம் ஆத்மி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற கோவா மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல்களில் பயன்படுத்தியதாகவும் பாஜக குற்றம்சாட்டியது.

இப்படி குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் புதிய கலால் வரிக் கொள்கையை திரும்பப் பெற்றது டெல்லி அரசு. எனினும் சர்ச்சைகளும் வழக்குகளும் தொடர்ந்து தற்போது டெல்லி துணை முதலமைச்சர் சிசோடியா கைது வரை சென்றிருக்கிறது.

புதிய மதுபான விற்பனை கொள்கை வகுக்கப்பட்ட விதத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி கடந்த ஆண்டு ஜூலை 8ந்தேதி டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனாவிற்கு அறிக்கை அளித்தார் அம்மாநில தலைமைச் செயலாளர். இதையடுத்து விசாரணை நடத்திய சக்சேனா பின்னர் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு கடந்த ஆண்டு ஜூலை 22ந்தேதி பரிந்துரை செய்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது. மணிஷ் சிசோடியா உள்பட 15 பேரின் பெயர்களை எஃப் ஐ ஆரில் சேர்த்தது சிபிஐ. குற்றச்சதி( 120பி), ஆவணங்களை முறைகேடாக மாற்றுதல் (477A) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.  பின்னர் மணிஷ்சிசோடியா வீடு உள்பட அவரோடு தொடர்புடைய 31 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில் நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக மணிஷ் சிசோடியாவிடம் தீவிர விசாரணை நடத்திய சிபிஐ, விசாரணைக்கு அவர் உரிய ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகக் கூறி கைது செய்துள்ளது.

அதே நேரம் இந்த கைது நடவடிக்கை மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  சிபிஐ அதிகாரிகளுக்கு இந்த கைது நடவடிக்கையில் சிறிதும் உடன்பாடு இல்லை என்றாலும், மத்திய பாஜக அரசு கொடுத்த நெருக்கடியாலேயே மணிஷ் சிசோடியாவை அவர்கள் கைது செய்துள்ளதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். மணிஷ் சிசோடியா கைது ஒரு கேவலமான அரசியல் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு டெல்லியில் புதிய கலால் வரிக்கொள்கை ஏற்படுத்தப்பட்டதில் எந்தவித முறைகேடும் நடக்க வில்லை என்றும் இந்த மாற்றத்தால் மதுவிற்பனை மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் 27 சதவீதம் அதிகரித்து 8,900 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் விளக்கம் அளித்து வருகின்றனர். டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாரத் ராஷ்ட்ரிய சமிதி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதாகவும் அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. அதே நேரம் டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவர் அணில் சவுத்ரி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். அதிகாரத்தை பணம் சம்பாதிப்பதற்கு ஆம் ஆத்மி பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும்; அன்பில் மகேஸ்

Arivazhagan Chinnasamy

வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் – நீதிமன்றம் அனுமதி

Dinesh A

விஜய் வசந்துக்கு ஆதரவாக ஸ்டாலின் பரப்புரை!

Jeba Arul Robinson